மஞ்சோங், அக்டோபர்.22-
பேரா, சித்தியவானில் உள்ள தெலுக் இந்தான்-சித்தியவான் சாலையில், இன்று காலை ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது கணவரும் இரண்டு குழந்தைகளும் படுகாயமடைந்தனர். சாலை ஓரத்தில் விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநருக்கு உதவ மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது எதிர்பாராதவிதமாக ஒரு ட்ரெய்லர் மோதியதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பேரா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் செயலாக்கப் பிரிவின் இடைக்காலத் துணை இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
விபத்தில் ட்ரெய்லர், கார், எம்பிவி வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. காயமடைந்த மற்றவர்களும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








