கோலாலம்பூர், நவம்பர்.14-
தனது உறவினருக்குச் சொந்தமான மூன்று நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் மறுகட்டமைப்பு விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் தனது பதவியைத் தவறாக பயன்படுத்தியதாக குடிநுழைவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
KP 22 கிரேட் உயர் அதிகாரியான நோர்ஹஸ்லிண்டா ஸைனால் அபிடின், தனது உறவினரின் நிறுவனங்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்குமாறு பரிந்துரை செய்தது மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று அவருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
அந்த மூன்று நிறுவனங்களின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் அந்தப் பெண் அதிகாரிக்கு தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்துள்ளது என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவு தலைமையகத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.








