பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர் விக்டர் சின் பூன் லூங் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரை நடத்தப்பட்ட 'ஓப்ஸ் வைக்கிங்' சோதனையில் இவர்கள் பிடிபட்டதாக புக்கிட் அமான் ஏ.எம்.எல்.ஏ பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஸ்லிஷாம் அப்துல் மஜித் தெரிவித்தார்.
கடந்த 2018 முதல் நடந்த பணமோசடி குறித்து திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை வாங்குவது போன்ற முறைகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சோதனையின் மூலம் 8 சொத்துக்கள், 32 வாகனங்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் என மொத்தம் பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர். தற்போது அனைவரும் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.








