ஓரினச் சேர்க்கை கொண்டு உள்ளடக்கம் தொடர்பாக மலேசிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான ஆர்.டி.எம்யை பாஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
டிவி2 அலைவரிசையில் ஓரினச் சேர்க்கை தொடர்பான அம்சங்கள் கொண்ட கார்ட்டூன் ஒளிபரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“கிளியோபாட்ரா இன் ஸ்பேஸ்” என்ற கார்ட்டூனில் இப்படிப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆர்.டி.எம் அலைவரிசையில் எல்.ஜி.பி.டி கூறுகள் கொண்ட கார்ட்டூன் ஒளிபரப்பப்படுவது இது இரண்டாவது சம்பவமாகும் என பாஸ் உலமா பிரிவுத் தலைவர் அகமட் யஹாயா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் “சான்டியாகோ ஆஃப் தி சீஸ்” என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியில் மறைமுகமாக எல்.ஜி.பி.டி அம்சங்கள் உள்ளதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை ஆர்.டி.எம் ஒளிபரப்பில் இருந்து நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்.டி.எம் தயாரிப்பாளர்களின் உள்ளடக்கத் தேர்வு செயல்முறையை கேள்விக்குட்படுத்தியுள்ள அகமட் யஹாயா, கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக எல்.ஜி.பி.டி அம்சங்கள் பரவும் அபாயம் இருப்பதால், தயாரிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.








