டாவோஸ், ஜனவரி.23-
2026-ஆம் ஆண்டு டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற மலேசிய பேராளர் குழு, இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ தலைமையில் மலேசியாவை ஒரு AI தேசமாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
இதற்காக வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் இறக்குமதி செய்யாமல், தரவு ஆணையம் போன்ற புதிய சட்டக் கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு, quantum மற்றும் blockchain தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது சமூகத்தில் சமத்துவத்தையும், மலிவு விலையில் அனைவருக்கும் கிடைப்பதையும் உறுதிச் செய்ய வேண்டும் என்று மலேசியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வளர்ந்த நாடுகள் தங்களின் ஏஐ ஆற்றலை வளரும் நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் டிஜிட்டல் முன்னேற்றத்தில் எந்தவொரு நாடும் பின்தங்கிவிடக் கூடாது என்றும் கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.
மேலும், ஏஐ பயன்பாடு மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்துவதை உறுதிச் செய்வது அவசியம் என மலேசியா சுட்டிக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் 'டிஜிட்டல் தூதரகங்கள்' எனும் புதிய கருத்தாக்கத்தை உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து மலேசியா உருவாக்கி வருகிறது.
இதற்கான வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும். அத்துடன், தொழிற்சாலைக் குழுமங்களின் மாற்றத்திற்கான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, வரும் ஜூன் மாதம் சரவாக்கில் முதல் 'தொழில்துறை மாற்றக் குழுமம்' தொடங்கப்படவுள்ளது. இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.








