இவ்வாண்டு நவம்பர் 1 வரை, பொய்ச் செய்திகள் குறித்தும் மதம், இனம், ஆட்சியாளர்கள் ஆகியவற்றை உட்படுத்திய 3 ஆர் விவகாரம் தொடர்பில் மொத்தம் 75 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாகத் தகவல் தொடர்பு, மின்னிலக்க துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 45க்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், 30 அறிக்கைகள் காவல்துறை, சட்டத் துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்ற தியோ நீ சிங் கூறினார்.
மேலும், 588வது சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் பொய்ச் செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சு தொடர்பில் மொத்தம் 3,752 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதாகவும் துணை அமைச்சர் தகவல் வெளியிட்டார்,
பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் பகிரப்படும், பதிவிடப்படும் இவ்வாறான உள்ளடக்கங்கள் அகற்றுப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அரசியல், சமூகம், மதம், பொருளாதாரம், கலாச்சாரம், பாதுகாப்பு, தேசிய இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பொய்ச் செய்திகளை கண்காணிக்க கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி சிறப்புப் பணிக்குழுவை அமைச்சு அமைத்ததாக நீ சிங் கூறினார்.








