சிப்பாங், நவம்பர்.06-
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து யுனைடெட் கிங்டம், மான்செஸ்டருக்கு 86 கிலோ கஞ்சாவைக் கடத்துவதற்கு இரண்டு காதல் ஜோடியினர் மேற்கொண்ட முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த இரண்டு காதல் ஜோடியினர் 8.3 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கஞ்சாவை மான்செஸ்டருக்குக் கடத்துவதற்குத் திட்டம் கொண்டிருந்த போதிலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கடைசி நேர உத்தரவுபடி அவர்கள், சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டதால் அந்த நான்கு காதல் ஜோடியினர், தங்கள் விமானப் பயணத்தை ரத்து செய்தனர்.
விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்த தங்களின் பயணப் பெட்டிகளை வெளியே எடுக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்ட போது, பயணப் பெட்டிக்குள் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை கண்காணிப்பு ஏஜென்சியின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் கும்பலின் உத்தரவின் பேரில் போதைப் பொருளை ஒப்படைக்கும் தரகராக அந்த நால்வரும் வேலை செய்து வந்துள்ளர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ஷுஹைலி இதனைத் தெரிவித்தார்.








