இந்நாட்டின் தமிழ் சமூகத்திற்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது மனமார்ந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த கால சாதனைகளைத் திரும்பிப் பார்ப்பதற்கும், வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கும் நாளை பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டு ஒரு முக்கியத் தருணமாக அமைவதாக தாம் வெளியிட்டுள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இலக்கவியல் அமைச்சின் கீழ் பாகுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் தொழில்நுட்பப் பயன்கள் மற்றும் புத்தாக்கங்கள் சென்றடைவதை உறுதி செய்ய தமது அமைச்சு அயராது பாடுபட்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.
உலகளாவிய ரீதியில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு போன்ற பொருளாதாரச் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய இக்கட்டான சூழலில், மலேசியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் சுமையைக் குறைக்கவும் 'மடானி' அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
"நிலைத்தன்மையில்லாத இந்த உலகச் சூழலில், அரசின் முயற்சிகளுக்கு மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. சமூக நல்லிணக்கமே நமது நாட்டின் மிகப்பெரிய சொத்து. எனவே, நாம் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தப் புத்தாண்டு ஒற்றுமையான மலேசியாவை உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், அதே வேளையில் சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கும் முறையே வைசாகி மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.








