செமினியில் உள்ள ஒரு குடியிருப்பில் நட்பு மற்றும் காதல் என்ற பெயரில் ஏமாற்றி வந்த 'லவ் ஸ்கேம்' கும்பலைச் சேர்ந்த நான்கு வெளிநாட்டினரைச் சிலாங்கூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வரும் இந்த கும்பல், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் ஆட்களைத் தொடர்பு கொண்டு, நட்பு அல்லது காதல் ரீதியான உறவை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பெறுவதையே இவர்கள் முக்கியத் தந்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர் ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடத்தி செய்தியாளர் கூட்டத்தில் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் இதனை தெரிவித்தார்.
இந்த கும்பலின் காதல் வலையில் சிக்கிய பாதிக்கப்பட்டவர்கள், "விலையுயர்ந்த பரிசுகள் அனுப்பி இருக்கிறோம்" என்று கூறி, அதற்கான வரிப் பணத்தைச் செலுத்தச் சொல்லி பெரும் தொகையைப் பறித்துள்ளனர்.
இந்தச் சோதனை குறித்து டத்தோ ஷாசெலி மேலும் கூறுகையில் கூறுகையில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் சுமார் 20,000 ரிங்கிட் மதிப்பிலான மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தக் கும்பல் மலேசியா மட்டுமின்றி இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களையும் குறிவைத்து ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் விளக்கினார்.








