சுங்கை பூலோ சிறை வளாகத்தில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த விசாரணைக்கைதி ஒருவர் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அது எவ்வாறு கசிந்தது என்பது குறித்து சிறைத்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், ஷா ஆலாம் நீதிமன்ற விசாரணையை முடித்துவிட்டு லாரியில் அழைத்து வரப்பட்ட 24 வயது முகமது ஹசன் என்ற கைதி, சிறையின் அணிவகுப்பு மைதானத்தில் லாரியில் இருந்து இறங்கியதும் தப்பியோடினார்.
சிறார் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இவர், ஆரஞ்சு நிற டி-ஷர்ட் மற்றும் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தார்.
பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கைதியை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.








