கோலாலம்பூர், அக்டோபர்.27-
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மலேசியாவிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு உடன் செல்லும் அமைச்சராக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் செயல்பட்டுள்ளார்.
நமது நாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த அதிபர் டிரம்பிற்கும், அமெரிக்கத் தூதுக் குழுவினருக்கும் மலேசிய அரசாங்கத்தின் சார்பாகவும், அமைச்சரவை சார்பாகவும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரின் இந்த வருகை, நாட்டின் பிரதமர் மற்றும் ஆசியான் தலைவர் என்ற முறையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கு தனித்துவமான மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது என்று சைஃபுடின் வர்ணித்துள்ளார்.
நண்பர்களை உருவாக்கவும், கொள்கைகளைத் தாரை வார்த்துக் கொடுக்காமலும் கருத்துக்களைச் சுதந்திரமாக பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது ஆசியானின் மையக் கொள்கையை நிலைநிறுத்துவதில் தம்முடைய பங்கினை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் மிகச் சிறப்பாக வழங்கியுள்ளார் என்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் டிரம்பை வழியனுப்பியப் பின்னர் சைஃபுடின் தமது முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








