கோலாலம்பூர், அக்டோபர்.03-
இஸ்ரேல் இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றிருந்த 23 மலேசியர்களை மீட்பதற்கு நல்லெண்ண அடிப்படையில் துருக்கியின் உதவி நாடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் Recep Tayyib Erdogan- னுடன் தாம் நடத்திய தொலைபேசி உரையாடலில் அவரிடம் மலேசியா இந்த உதவியைக் கோரியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலைச் சுற்றியுள்ள ஏதாவது ஓர் இடத்திலிருந்து தங்களின் மலேசியப் பிரஜைகளை ஏற்றிக் கொண்டு இஸ்தான்புல்லுக்கு கொண்டு வருவதற்கு துருக்கியின் ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்யுமாறு அதிபர் Recep Tayyib Erdogan- ஐ தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இறைவன் அருளினால், இஸ்தான்புல்லில் இருந்து மலேசியர்கள் திரும்ப அழைத்து வரப்படுவர் என்று கோலாலம்பூர் மஸ்ஜிட் அல் கதிஜா பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
இதனிடையே 23 மலேசியர்களின் பாதுகாப்பையும் விடுதலையையும் உறுதிச் செய்வதற்காக கட்டார் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு அனைத்துலக இராஜதந்திர வழிகளை மலேசியா செயல்படுத்தியுள்ளது என்றும் அன்வார் கூறினார்.
நேற்று அதிகாலையில் அனைத்துலக கடல் பகுதியில் Global Sumud Flotilla மனிதநேயப் பணியை மேற்கொண்ட போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் 23 மலேசியர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
மனிதநேய உதவித் திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்களுடன் இவர்கள் பாலஸ்தீனம், காஸா நோக்கி கப்பலில் சென்று கொண்டிருந்த போது யூத இராணுவத்தினால் வழி மறிக்கப்பட்டனர்.
GSF எனும் Global Sumud Flotilla மனித நேயக் குழுவின் நடவடிக்கையானது, ஆழமான மனிதநேயக் கோட்பாடுகள் அடிப்படையில் அமைந்துள்ளது. காஸாவில் பலவீனமாக உள்ளவர்களுக்கும், பசியால் வாடுவோருக்கும், நோயாளிகளுக்கும், சிறுபிள்ளைகளுக்கும் உதவுவதற்காக மனிதநேய அடிப்படையில் இவர்கள் உதவச் சென்ற போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.








