கோலாலம்பூர், நவம்பர்.14-
புத்ராஜெயா கழகத்தின் முன்னாள் தலைவர் ஃபாட்லுன் மாக் உஜுட், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
ஃபாட்லுன் மாக் உஜுட், பதவிக் காலம் நாளை சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி தனது பதவி காலத்தை நிறைவு செய்யவிருந்த கோலாலம்பூர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப், முன்கூட்டியே தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ஃபாட்லுன் மாக் உஜுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
58 வயதான ஃபாட்லுன் மாக் உஜுட், நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார். கூட்டரசு மேம்பாடு மற்றும் மாநகர நிர்வாகம் ஆகிய துறைகளில் 28 ஆண்டு காலம் அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.
புத்ராஜெயா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தியதில் மிகச் சிறப்பாக தலைமைத்துவ அடைவு நிலையை ஃபாட்லுன் மாக் உஜுட் கொண்டுள்ளார் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.








