கிள்ளான், அக்டோபர்.02-
சிலாங்கூர் ராஜா மூடாவைக் கரம் பிடித்துள்ள சிக் அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஸிஸிற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, மாநிலத்தின் முதல் நிலை உயரிய விருதான ஶ்ரீ படுகா மாஹ்கோத்தா சிலாங்கூர் எனும் விருதை வழங்கி இன்று கெளரவித்துள்ளார்.
டத்தின் படுகா ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட அந்த உயரிய விருது, இன்று கிள்ளான், ஆலாம் ஷா அரண்மனையில் உள்ள அரச பள்ளிவாசலில் நடைபெற்ற அரச திருமண வைபவத்திற்குப் பிறகு சுல்தான், வழங்கி சிறப்பு செய்தார். சிலாங்கூர் சுல்தானின் புதல்வரும், மாநிலத்தின் பட்டத்து இளவரசருமான தெங்கு அமீர் ஷா இப்னி சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, தமது வாழ்க்கைத் துணைவியராக சிக் அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஸிஸை இன்று கரம் பிடித்தார்.








