ஜோகூர் பாரு, செப்டம்பர்.21-
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மெர்சிங் தீவுகளின் இயற்கை அழகுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது! இந்தத் தீவுகளின் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பை உறுதிச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கட்டளைப் பிறப்பித்துள்ளார். மெர்சிங் தீவுகளின் அழகைப் பாதுகாக்கத் திறன்மிக்க மேலாண்மை தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகமான சுற்றுலாப் பயணிகளால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்புக் குறைபாடுகள் அதிகரிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளைக் கண்ட பின்னரே மாமன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இனி, சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் சுற்றுலாப் பயணிகள் வருகையை ஒழுங்குபடுத்த கடுமையான விதிமுறைகள் நடப்புக்கு வரவுள்ளன.








