கோலாலம்பூர், செப்டம்பர்.22-
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்படவிருக்கும் ஒரு மலேசியப் பிரஜையான கே. தட்சணாமூர்த்தியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு கனத்த இதயத்துடன் அவரின் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
தங்கள் மகனின் மரணம் உறுதிச் செய்யப்பட்டு விட்டதால், அவரைக் காப்பாற்றுவதற்கு இனி வேறு வழியில்லாத நிலையில் அவரின் நல்லடக்கச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக 39 வயதுடைய அந்த மலேசிய இளைஞரின் தாயார் தழுதழுத்த குரலில் கூறியதாக அவரின் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 44.96 கிராம் diamorphine போதைப்பொருளைக் கடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட தட்சணாமூர்த்திக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.








