Oct 14, 2026
Thisaigal NewsYouTube

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

டச்சு மாடல் இவானா ஸ்மித்தின் மரணம் தொடர்பான விசாரணையில் குறைபாடுகள் இருந்ததாகக் கூறி, அவரது தாயார் கிரிஸ்டீனா வெர்ஸ்டப்பனுக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அரசாங்கத்திற்கும், போலீசாருக்கும் உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசின் மேல்முறையீட்டை ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, பொது இழப்பீடு, கூடுதல் இழப்பீடு மற்றும் முன்மாதிரி இழப்பீடு உள்ளிட்ட அனைத்து இழப்பீடுகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தீர்ப்புக்கான காரணங்களை விளக்கிய நீதிபதி கே. முனியாண்டி, விசாரணைகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பாக, தனிப்பட்ட புகார்தாரர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் சட்டரீதியான தனிப்பட்ட கடமையைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போலீசாருக்கு பொதுமக்கள் மீதான கடமைகள் இருந்தாலும், அது தனிநபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட சட்டக் கடமையாகத் தானாகவே மாறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலீஸ் அதிகாரிகளின் பணிநியமனம் மற்றும் மேற்பார்வை நடைமுறைகளில் உத்தரவுகளைப் பிறப்பித்ததன் மூலம் உயர் நீதிமன்றம் தனது நீதித்துறை வரம்பை மீறியுள்ளதாக நீதிபதி முனியாண்டி குறிப்பிட்டார்.

அதேவேளையில் போலீஸ் விசாரணைகளை மேற்பார்வையிடுவதும் வழிநடத்துவதும் நிர்வாக மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரிகளின் பொறுப்பு என்றும், அதிகாரப் பிரிவினையை நீதிமன்றங்கள் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, கிரிஸ்டீனா வெர்ஸ்டப்பனுக்கு மொத்தம் 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், விசாரணைக்குத் தலைமை தாங்கிய அதிகாரியை நீக்கவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழக்குத் தொடரும் தரப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

18 வயதான இவானா ஸ்மித், கடந்த 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள கேப்ட்ச்குவேர் ரெசிடன்ஸ் குடியிருப்பின் 20ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் இந்த மரணம் விபத்தால் ஏற்பட்டதாக விசாரணையில் முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் உயர் நீதிமன்றம், அடையாளம் தெரியாத நபர் அல்லது நபர்களால் மரணம் ஏற்பட்டதாக மறுவகைப்படுத்தியது.

இந்நிலையில் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கிரிஸ்டீனா வெர்ஸ்டப்பனின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோருவது குறித்து சட்டக் குழு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →