சபா மாநிலம் தாவாவ் பகுதியில் 18 வயது பெண்ணிடம் ஆயுத முனையில் கொள்ளையடித்து, பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் மூவரைக் கைது செய்ய அம்மாநில போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேக நபர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரியைத் தாக்கிவிட்டு கடலில் குதித்துத் தப்பிக்க முயன்றதால் எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது குறித்து தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்டி மாட் ஜுசோ கூறுகையில், துரத்திச் செல்லப்பட்டபோது சந்தேக நபர் போலீஸ் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்றதாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
30 வயதைக் கடந்த வெளிநாட்டவரான அந்த சந்தேக நபரிடம் முறையான அடையாள ஆவணங்கள் இல்லை என்றும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியானதாகவும் ரோஸ்டி குறிப்பிட்டுள்ளார்.








