சரவாக், மிரியில் இருந்து சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்துக்கு, வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி விமானச் சேவை தொடங்கவுள்ளது. இதன் மூலம் வேலை, வணிகம், கல்வி, மருத்துவம் மற்றும் குடும்பத் தேவைகளுக்காகப் பயணம் செய்வோருக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.
சுற்றுலா, கலை, பண்பாட்டு துணை அமைச்சர் சியூ சூன் மான் கூறுகையில், கோலாலம்பூர் நகர மையத்துக்கு அருகிலுள்ள சுபாங் விமான நிலையம், பயணிகள் தரைவழிப் போக்குவரத்தைத் திட்டமிடுவதற்கும் உதவும் என்றார்.
மிரி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பாத்தேக் ஏர் விமான நிறுவனத்துடன் இந்தப் புதிய வழித்தடத்தைத் தொடங்குவது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார்.
இந்த நேரடி விமானச் சேவை, மிரி மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்குக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதுடன், வணிகம், சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.








