கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து சென்ற ஐந்து மலேசியர்கள், ஜப்பானில் சுமார் 31 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 5 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் பிடிபட்ட சம்பவம் குறித்து, ஜப்பானிய அதிகாரிகளிடம் மலேசியா விளக்கம் கோரியுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கானை ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெறுமாறு பணித்துள்ளார்.
தோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மலேசியர்களில் நால்வர் ஆண்கள்; ஒருவர் பெண். அவர்களின் காலணிகளின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன், ஜப்பானிய சுங்க அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதிக ஆபத்துள்ள நாடுகளுக்குப் புறப்படும் பயணிகளுக்கு உடல் சோதனையும், பயணப் பைகளுக்கு முழுமையான சோதனையும் நடத்துவது உள்ளிட்ட விமான நிலையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டத்தை மலேசியா தொடர்ந்து செயல்படுத்தும் என டத்தோ ஸ்ரீ சைஃபுடின் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் விமான நிலையப் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதும் முக்கியமாகியுள்ளது என்றும் அவர் விளக்கினார்.








