Feb 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கின் கடல் மதில் மற்றும் நடைபாதை திட்டத்திற்கு யுனெஸ்கோ பாரம்பரிய விருது
தற்போதைய செய்திகள்

பினாங்கின் கடல் மதில் மற்றும் நடைபாதை திட்டத்திற்கு யுனெஸ்கோ பாரம்பரிய விருது

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.21-

பினாங்கின் Esplanade கடல் மதில் மற்றும் நடைபாதை திட்டம், 2025-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு விருதுகளில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்திற்கு 'பாரம்பரிய சூழலில் புதிய வடிவமைப்பு' எனும் விருதுடன், 'நிலையான வளர்ச்சிக்கான சிறப்பு அங்கீகாரமும்' வழங்கப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் புத்தாக்க பொருளாதார ஆட்சிக்குழுத் தலைவர் வோங் ஹோன் வாய், இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்று தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

"கடலோர மண் அரிப்பு மற்றும் சிதைவுக்கு மத்தியில், புதுமையான நவீன பொறியியல் மற்றும் பாரம்பரிய கூறுகளை ஒருங்கிணைத்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொது இடத்தைப் பாதுகாப்பதிலும் மறுவடிவமைப்பு செய்வதிலும் இத்திட்டம் மலேசியாவிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று இந்த அங்கீகாரத்தை வழங்கிய நடுவர் குழு வர்ணித்துள்ளது.

இந்த வடிவமைப்பு, அதன் செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதோடு, சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தவும், மக்கள் கடற்கரைப் பகுதியை எளிதாக அணுகவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் வகை செய்கிறது.

மேலும் புதிய கடல் மதிலானது 19-ஆம் நூற்றாண்டின் வடிவமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் விரிவான நடைபாதையைக் கொண்டுள்ளது.

பாரம்பரிய கிரானைட் கற்கள் மற்றும் நவீன மண் அரிப்பு எதிர்ப்புத் தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செனோடாப் (Cenotaph) போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ள அசல் கடல் மதிலைப் பாதுகாக்கும் வகையில், அலைகளின் ஏற்றத்தின் போது நீரில் மூழ்கும் விதமாக ஒரு கீழ்த்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களின் வழிகாட்டுதலில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த Esplanade பகுதி, 'மலாக்கா மற்றும் ஜார்ஜ் டவுன் வரலாற்று நகரங்களின்' உன்னத உலகளாவிய மதிப்பைப் பறை சாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News