புத்ராஜெயா, ஜூலை.18-
ஜோகூர் மாநிலத்தில் 180 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தரவு மையம் நிர்மாணிப்பிற்கான குத்தகை டெண்டர் தொடர்பில் நடந்த மிகப் பெரிய ஊழலில் பிரபல, கட்டுமான நிறுவனம் ஒன்றின் குத்தகை நிர்வாகி, அவரின் மனைவி மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
நிறுவனத்தின் குத்தகை நிர்வாகிப் பொறுப்பில் உள்ள அந்த ஆடவர், இன்று புத்ராஜெயா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இர்ஸா ஸுலைக்கா ரொஹானுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, வரும் ஜுலை 24 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றது. அவரின் மனைவியை வரும் ஜுலை 20 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது.
நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களான இரண்டு நபர்களை வரும் ஜுலை 22 ஆம் தேதி வரை 5 தினங்களுக்குத் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
40 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் நேற்று கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட ஓப் வேய்ஸ் சோதனையில் கைது செய்யப்பட்டனர் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நால்வரும் கைது செய்யப்பட்டது மூலம் அந்த குத்தகை நிர்வாகியின் வீட்டில் 7.5 மில்லியன் ரொக்கப் பணத்தை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட குத்தகைத் திட்டத்தில் 6 குத்தகைகளை வழங்கியதற்குக் கைமாறாக அந்த நிர்வாகிக்கு மேற்கண்ட பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
இந்த நால்வரும் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதை அந்த ஆணையத்தின் செயலாக்கத் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி உறுதிப்படுத்தினார்.








