கிளந்தான்–பேராக் மாநிலங்களுக்கு இடையிலான வனப்பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் இரண்டு மலை வழிகாட்டிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகின்றது.
குவா மூசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள், திட்டமிட்டபடி செப்டம்பர் 3-ஆம் தேதி பேராக்கில் உள்ள போஸ் கெமார் வழியாக வெளியேறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலையேற்றக் குழுவினர் குறிப்பிட்ட தேதியில் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் இன்று சிலாங்கூரில் போலீஸ் புகார் அளித்துள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் கடைசியாக பேராக் மாநில வனப்பகுதியில் இருந்த போது தொடர்பில் இருந்தது வனத்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பேராக் அதிகாரிகளிடம் இருந்து உறுதியான தகவலைப் பெற முயற்சித்து வருவதாகவும் சிக் சூன் ஃபூ குறிப்பிட்டுள்ளார்.








