சிரம்பான் கார்டன் ஹோம்ஸ் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர் ஒருவர் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஃஸாப்னி அஹ்மாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் தொடர்பான முழு விவரங்களை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, நாளை சிரம்பான் போலீஸ் தலைமையகத்தில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த சந்தேக நபர் 50 வயதுடையவர் என்றும், அவருக்கு போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான 8 வழக்குகள் இருப்பதாகவும், 1961 கடத்தல் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றிலும் அவர் தேடப்பட்டு வந்ததாகவும் அல்ஃஸாப்னி அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பில் வசித்து வருபவரான 72 வயதான அலி என்பவர், போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து அண்டை வீட்டார் தமக்குத் தெரிவித்ததாகவும், பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அப்பகுதியில் ஏராளமான போலீஸ் வாகனங்களைப் பார்த்ததாகவும், சம்பவ இடத்துக்குச் செல்லும் சாலை போலீஸ் தடுப்புகளால் மூடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இச்சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததை குடியிருப்பாளர்கள் கவனித்ததாக அலி தெரிவித்துள்ளார்.








