சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் புகைமூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முகக்கவசங்களை விநியோகிக்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தயாராகி வருகின்றது.
இது குறித்து மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், அதிக காற்று மாசுக் குறியீடு பதிவாகும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்றும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முககவசங்களானது புகைமூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், எபிஐ அளவு ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் போது, முதியவர்கள் மற்றும் இதயம் அல்லது சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜமாலியா அறிவுறுத்தியுள்ளார்.
காற்றின் தரம் மோசமாக இருக்கும் நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து, முடிந்தவரை வீட்டுக்குள் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கக்கூடிய செயல்களில் ஈடுபடாமல், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலைமையை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஜமாலியா உறுதியளித்துள்ளார்.








