ஜோகூர் மாநிலம், சுங்கை கெலாம்பு பகுதியில் தனது பாட்டி வீட்டின் அருகே 2 வயது சிறுமி தெருநாய்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டுள்ளதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
காலை 7 மணியளவில் நூர் ஹைரா வாதிகா ஹாஸிமி தனது சகோதரர்களுடன் பாட்டி டர்லிண்டா டார்லிஸ் வீட்டிற்கு வந்திருந்த நேரத்தில் சுமார் 5 நாய்கள் அச்சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
இத்தாக்குதலில் சிறுமியின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
முதலில் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி, பின்னர் காயங்களின் தீவிரம் காரணமாக ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவர் செயற்கை மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் சிறார் சட்டம் 2001-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய சிலர் இந்தத் தெருநாய்களை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சிறுமியின் பாட்டி சந்தேகம் தெரிவித்துள்ளார்.








