பேராக் மாநிலம் சுங்கை சீப்புட் பகுதியில் உள்ள கம்போங் சோ பகுதியில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி மீட்கப்பட்ட மலாயன் வகை பெண் புலி ஒன்று, தற்போது திரங்கானு உயிரியல் பூங்கா, தாசிக் கென்யீர் பகுதியில் அதன் இயற்கை வாழ்விடத்திற்குள் மீண்டும் விடப்பட்டுள்ளது.
யோங் சோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 7 வயது புலியானது, சுங்கையிலுள்ள தேசிய வனவிலங்குகள் மீட்பு மையத்தில் மறுவாழ்வு சிகிச்சை பெற்றது.
அங்கு கால்நடை மருத்துவப் பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனை மற்றும் நோய் பரிசோதனைகளுக்குப் பின்னர், தற்போது இயற்கை வாழ்விடத்தில் விடப்பட்டுள்ளது.
தேசிய இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு சார்பில், அமைச்சர் டத்தோ ஶ்ரீ அர்துர் ஜோசஃப் குருப், நேற்று திரங்கானு தேசிய பூங்காவிலுள்ள, தாசிக் கென்யீரில் வனவிலங்கு மாற்றம் மற்றும் விடுவிப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மனிதர்–வனவிலங்குகள் இடையிலான மோதல்களை நிர்வகிப்பதுடன், வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் வனவிலங்குகளின் இயற்கை வாழ்விட எண்ணிக்கையை மீட்டெடுத்தல், மரபணு பன்முகத்தன்மையை அதிகரித்தல் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாத்தல் ஆகியவை நோக்கங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.








