பல ஆண்டுகளாக நீடித்த சவால்கள் மற்றும் காத்திருப்புக்குப் பின்னர், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நிபோங் திபாலில் இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றதாக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயாவ், கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சிடேக் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ஆகியோருக்கு அவர் தமது நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய பள்ளிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 56 வாரங்களில் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த புதிய கட்டிடம் மாணவர்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் தரமான கற்றல் சூழலை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு பணிக் குழுத் தலைவர் என்ற முறையில் இந்தத் திட்டம் நிறைவேறியிருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டரசு அரசாங்கம், பினாங்கு மாநில அரசு, கல்வி அமைச்சு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகியவற்றிருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என உறுதியளித்துள்ளார்.
மேலும், அனைத்து பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








