நாளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு
சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு கும்பல் ஒன்று மலேசியாவிற்கு எதிராக தொடுத்துள்ள வழக்கில் 1,490 கோடி அமெரிக்க டாலர் அல்லது 6,259 கோடி வெள்ளி இழப்பீட்டுத் தொகையை சூலு வாரிசுதார்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்க வேண்டுமா? இல்லையா என்பது குறித்து நெதர்லாந்து, The Hague யில் உள்ள அப்பீல் நீதிமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பை வழங்கவிருக்கிறது.
மலேசிய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் சூலு வாரிசுதாரர்கள் தொடுத்த வழக்கில் மலேசிய அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையாக 6,259 கோடி வெள்ளியை வழங்க வேண்டும் என்று இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நடுவர் மன்றம் மூலமாக சூலு வாரிசுதாரர்கள் இத்தீர்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது.
ஸ்பெயினில் நடுவர் மன்றத்தின் தலைவர் டாக்டர் கொன்ஸாலோ ஸ்டம்பாவினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து நெதர்லாந்தில் The Hague யில் உள்ள அப்பீல் நீதிமன்றம் நாளை முடிவு செய்யவிருக்கிறது.
இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்காக சூலு வாரிசுதாரர்கள் ஏற்கனவே லக்ஸம்பர்கில் உள்ள மலேசியாவின் பெட்ரோனாஸிற்கு சொந்தமான சொத்துகளையும், நெதர்லாந்தில் உள்ள உள்ள சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








