தேசிய அளவிலான 55 ஆவது ஆசிரியர் தின விருது வழங்கும் விழா, ஈப்போவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கல்வித்துறை துணை அமைச்சர் வோங் கா வோ மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழாவில் உரையாற்றிய ஃபட்லினா சீடேக், பள்ளிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுக் கவலைகளுக்குத் தீர்வு காணவும் நாடு முழுவதும் காலியாக இருந்த சுமார் 50 தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.
ஆசிரிய தின கொண்டாட்டாத்தின் முக்கிய நிகழ்வாக சிறந்த நல்லாசியர் களுக்கு அமைச்சர் ஃபட்லினா சீடேக் பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்புப செய்தார்.
கங்கார் புலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முனைவர் கோமதி சங்கரன், அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், “திவெட் துறையின் சிறந்த முன்னோடி ஆசிரியர்” விருதான “அனுகெரா குரு ஐகோன் எனும் டிவிஇடி” விருதைப் பெற்றார்.
பினாங்கு டென்பி அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த டாக்டர் சதீஷா குணசேகரன், தனியார் பள்ளிகளில் சிறந்த சேவையாற்றியதற்காக “சிறந்த தனியார் பள்ளி ஆசிரியர்” விருதினைப் பெற்றார்.
ஜொகூர் மாநிலம் குலாய் இந்திராபுரா தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரி லெட்சுமணன், சிறப்புக் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு “சிறந்த சிறப்புக் கல்வி ஆசிரியர்” விருது வழங்கப்பட்டது.
கிளந்தான் கோத்தா பாரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வளாக விரிவுரையாளரான டாக்டர் பானு ரமணன், கல்விச் சேவைக்காக “ ஐகோன் புத்தாக்க ஆசிரியர்” விருதைப் பெற்றார்.
கோலா சிலாங்கூர் வாகீசர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற குவாங் லியோங் யீ, கல்வித்துறையில் சிறப்பான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதற்காக “அனுகெரா அடிகுரு" எனும் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் இந்த உன்னதமான விருதுகள், கல்வித்துறையில் அவர்களின் கூட்டுமுயற்சிக்கும் தியாகத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும் என்று விருது பெற்ற நல்லாசிரியர்கள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். 'இணையற்ற ஆசிரியர், நாட்டின் துடிப்பு' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளுக்கேற்ப, எதிர்காலத் தலைமுறையைத் திறம்பட வடிவமைக்க இந்த விருதுகள் தங்களுக்குப் புத்துணர்ச்சியையும் கூடுதல் பொறுப்பையும் வழங்கியிருப்பதாக அவர்கள் தங்களின் பேட்டியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.










