கோலாலம்பூர், ஜூலை.23-
கோலாலம்பூரிலிருந்து சீனா, செங்டு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையில் சண்டை நிகழ்ந்துள்ளது.
மூன்று பெண்கள் நீண்ட நேரம் மிகவும் சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்ததால், அவர்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர், அவர்களை அமைதி காக்கும்படி கூறிய ஆலோசனைப் பின்னர் கைகலப்பில் முடிந்தது.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை ஏர் ஆசியாவின் D7326 விமானத்தில் நிகழ்ந்தது. விமானம் நடுவானில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, கோலாலம்பூரில் பேசத் தொடங்கிய அந்த மூன்று பெண்கள் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கேபின் விளக்குகள் அனைக்கப்பட்டப் பிறகும் அவர்களின் பேச்சு தொடர்ந்ததால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் ஆத்திரமடைந்துள்ளார். பேச்சை நிறுத்தும்படி பல முறை அந்தப் பெண்களுக்கு அறிவுறுத்தியும், அவர்கள் பேச்சை நிறுத்துவதாக இல்லை. இதனால் அந்தப் பெண்களை முட்டாள் என்று அவர் திட்டியிருக்கிறார். பதிலுக்கு அந்தப் பெண்கள் வாயை மூடு என்று கூறிய போது, வாக்குவாதம் கடுமையாகி, நிலைமை மோசமடைந்து அவர்களுக்கு இடையில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது.
மூன்று பெண்களில் ஒருவர், சம்பந்தப்ட்ட ஆடவரை முகத்தில் குத்தும் காட்சியைக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
எனினும் விமானப் பணியாளர்கள் தலையிட்டு அவர்களின் சண்டையை நிறுத்தினர். அவர்கள் அனைவரும் செங்டு விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சீன நாட்டுப் போலீசாரால் தடுக்கப்பட்டனர்.








