கோலாலம்பூர், ஜூலை.18-
தம்மைச் சட்டவிரோதமாகக் கைது செய்ததற்காக கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவான ஜாவிக்கு எதிராக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சித்தி காசிம் தொடுத்த வழக்கில் இன்று வெற்றி பெற்றார்.
அந்தச் சமூகப் போராட்டவாதிக்கு கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகா, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஹோட்டல் ஒன்றில் நிதி திரட்டும் விருந்தோம்பல் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக அந்த சமய இலாகா, தம்மை கைது செய்ததை எதிர்த்து சித்தி காசிம், அந்த இலாகாவைச் சேர்ந்த 15 அதிகாரிகள் மற்றும் 7 தனிநபர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கைத் தொடுத்து இருந்தார்.
தாம் எந்தவோர் அதிகாரிக்கும் இடையூறு விளைவிக்காத நிலையில் தாம் கைது செய்யப்பட்டு, ஹோட்டலில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இருந்தது சட்டவிரோதமானது என்று கூறி சித்தி காசிம் இந்த சிவில் வழக்கைத் தொடுத்து இருந்தார்.
ஹோட்டலில் ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வேளையில் சித்தி காசிமை, சமய இலாகா அமலாக்க அதிகாரிகள் கைது செய்து இருப்பது மூலம் அந்த அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறா பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று நீதிபதி சூ தியாங் ஜூ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








