கோலாலம்பூர், அக்டோபர்.03-
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன் நேற்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு அமைதிப் பேரணியின் போது காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு ஆடவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
23 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் மேல் விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தைக் காவல்துறையினர் மதிக்கிறார்கள். அதே சமயம், பங்கேற்பாளர்கள், சட்டம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்கி கூட்டம் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.








