Aug 28, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டில் 1.097 மில்லியன் முறைகேடு: எம்.சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டில் 1.097 மில்லியன் முறைகேடு: எம்.சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

Share:

வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு தொடர்பாக மொத்தம் 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் முன்னாள் மனிதவள அமைச்சர் எம் சரவணன் குற்றமற்றவர் என கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

58 வயதான சரவணன், நீதிபதி அஸூரா ஆல்வி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

வெக்டிகா ரிசோர்சஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநர் டான் டெக் லிம் -இடமிருந்து, சையத் அமீருல் சையத் அகமத் மூலமாக இந்த பணத்தைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அப்போது மனிதவள அமைச்சராக இருந்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, டி.வாய்.கே.பி. என்ஜினீயரிங் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு, 1,000 வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கு, அனுமதி வழங்குவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு June மற்றும் July மாதங்களுக்கு இடையில், மூன்று தவணைகளாக மொத்தம் 1.097 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக சரவணன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முதல் குற்றச்சாட்டின்படி, 2022-ஆம் ஆண்டு June 16-ஆம் தேதி, புக்கிட் ஜலீல் கோல்ஃப் & கன்ட்ரி ரிசார்ட்டில்-ல், டான் டெக் லிம்-இடமிருந்து சையத் அமீருல் சையத் அகமத் மூலமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமாக பெற்றதாக கூறப்படுகின்றது.

இரண்டாவது குற்றச்சாட்டில், 2022-ஆம் ஆண்டு July 7 – ஆம் தேதி ஜாலான் தெலாவி 3, பங்ஸ்சார் பகுதியில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது குற்றச்சாட்டின்படி, 5 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் தொகை மேபேங்க் இஸ்லாமிக் சோலை மூலம் பிக் செவன் வென்சர்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மேபேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(B)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதே சட்டப்பிரிவு 24(1)-ன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.

Related News