மலேசியாவுக்கு தாய்லாந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு எடுப்பதற்கான 23 ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க, மலேசியா மற்றும் தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளன.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற 29ஆவது ஆசியான் தொழிலாளர் அமைச்சர்கள் கூட்டத்தையொட்டி, மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ இராமணன் ராமகிருஷ்ணனும், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலபுன் அமோர்ன்விவாட்-டும் நடத்திய உயர்மட்ட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தலை ஒழுங்குபடுத்தும் 2003ஆம் ஆண்டு தொழிலாளர் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து, தற்போதைய பொருளாதாரத் தேவைகள் மற்றும் தொழிலாளர் நலத் தரங்களுக்கு ஏற்ப புதிய ஒப்பந்தத்தை உருவாக்க இரு தரப்பும் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்தன.
புதிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இறுதி செய்வதற்காக இரு நாடுகளின் மனிதவள மற்றும் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் இணைந்து தொழில்நுட்பக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்வாழ்க்கைக் கல்வி பயிற்சியான திவேட் துறையிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் ஆலோசித்தன.
மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் பரிமாற்றம், தொழில்துறை பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றுடன் டிஜிட்டல் திவேட், பசுமைத் திறன்கள், நவீன உற்பத்தி மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற புதிய துறைகளிலும் மலேசியாவும், தாய்லாந்தும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் ஆராயப்படும் மனித வள அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.









