கோலாலம்பூர்,ஜன.22
மக்களுடன் அன்பும், நட்பும்,அக்கறையும் கொண்டிருப்பதே மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் பில்லா ஷாவின் அருங்குணமாகும். மக்களின் நல்வாழ்வில் ஓர் அக்கறை மிகுந்த ஆட்சியாளராக அவர் விளங்கி வருகிறார் என்கிறார் இஸ்தானா நெகாரா - வின் முன்னாள் மேலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபடில் ஷம்சுடின்.
மலேசியாவின் 16 ஆவது மாமன்னராக தமது ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தை இம்மாதம் இறுதியில் நிறைவு செய்யவிருக்கும் மாமன்னர் அப்துல்லாவின் சிறப்புகள் குறித்து விவரிக்கையில், இஸ்தானா நெகராவில் மாமன்னருடனும், , பேரரசியார் துன்கு அசிசா அமினா மைமுனா இஸ்கன்டாரியா வுடனும் நெருக்கமாக சேவையாற்றிய அரண்மனை சேவகர்களில் ஒருவரான அஹ்மாட் ஃபடில் ஷம்சுடின் மேற்கண்டவாறு கூறினார்.
JIWA RAKYAT என்பது மறைந்த முன்னாள் பகாங் சுல்தான், சுல்தான் அஹ்மாட் ஷா வின் நெஞ்சார்ந்த சுலோகமாகும். அரச சடங்கு நிரல்களை பொருட்படுத்தாமல் மக்களுடன் மக்களாக ஒன்று கலப்பதிலும், அவர்களுடன் இரண்டறக் கலந்து பழகுவதிலும் தனித்துவமான ஆட்சியாளர்களில் ஒருவராக சுல்தான் அஹ்மாட் ஷா விளங்கினார். .
மாண்புக்குரிய அந்த முன்னாள் பகாங் சுல்தானின் தனயனான சுல்தான் அப்துல்லா, மக்களை ஒரு போதும் தம்முடன் பிரித்துப் பார்த்ததில்லை. இதனை அவரின் இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் தம்மால் தெளிவாகவும், நேரடியாகவும் காண முடிந்ததாக அஹ்மாட் ஃபடில் ஷம்சுடின்கூறுகிறார்.
மக்களுக்கு உதவுவதில் குறிப்பாக வெள்ளம், விபத்து போன்ற பேரிடர்களில் களம் இறங்கி மக்களின் துயரை தீர்ப்பதில் அவர் இன்னமும் ஒரு வேள்வியாக கொண்டுள்ளார். மக்களின் இன்னல்களை களைவதில் அரசாங்கம் இறங்கினாலும் மக்களின் இடர்களை தமது துயராக கருதும் மனித நேயமிக்க ஓர் ஆட்சியாளராக சுல்தான் அப்துல்லா விளங்கியுள்ளார் என்று Ahmad Fadil Shamsuddin புகழாரம் சூட்டினார்.
மாமன்னருக்கான அலவன்ஸ் தொகையைக்கூட சுல்தான் அப்துல்லா பெற்றதில்லை.
சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு தமது காரை நிறுத்தி உதவுவதில் பல சந்தர்ப்பங்களில் தாம் நேரடியாக பார்த்திருப்பதாக தற்போது ஐக்கிய அரசு சிற்றரசில் மலேசியத் தூதராக பணியாற்றும் Ahmad Fadil Shamsuddin நினைவுகூர்ந்தார்.
64 வயதான மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் 5 ஆண்டு ஆட்சி தவணைக் காலம், அடுத்த ஒன்பது நாட்களில் நிறைவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








