கோல குபு பாரு, மே 11-
பதிநான்கு நாள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தற்கு பிறகு சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் இன்று சனிக்கிழமை வெகு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 12 மணி வரையில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ள கோலகுபு பாரு இடைத் தேர்தலில் 39,362 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோலகுபு பாரு தொகுதியில் 68 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ள வேளையில் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைத் தேர்தலில் DAP சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக 31 வயதபாங் சாக் தாவோ, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக உலுசிலாங்கூர் தொகுதியின் பெர்சத்து கட்சியின் இடைக்காலத் தலைவர் கைருல் அஸ்ஹரி சவுத், பார்ட்டி ரக்யாட் மலேசியா வேட்பாளராக ஹபிஸா ஜைனுதீன் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளரான ஞான் கே க்ஸின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதில் 40 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள பிரேசர் மலையில் ஒரு வாக்களிப்பு மையம் மட்டும் பிற்பகல் 2 மணிக்கு மூடப்படுகிறது. தேர்தல் முடிவு இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








