ஜார்ஜ்டவுன், ஜனவரி.04-
முகநூலில் பழகிய மர்மப் பெண் ஒருவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் சுமார் 1.002 மில்லியன் ரிங்கிட் சேமிப்பை ஓர் அரசு ஓய்வூதியதாரர் மொத்தமாகப் பறிகொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! குறுகிய காலத்தில் 200 விழுக்காடு ஆதாயம் தருவதாகக் கூறி அந்தப் பெண் விரித்த வலையில் சிக்கிய 67 வயது முதியவர், பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 22 முறை பணத்தை அனுப்பித் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து தவிக்கிறார்.
சுமார் 7.4 மில்லியன் ரிங்கிட் ஆதாயம் வந்துவிட்டதாகச் செயலி மூலம் கணக்குக் காட்டி ஏமாற்றிய மோசடிக் கும்பல், அந்தப் பணத்தை எடுக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என்று கூறி மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறித்துள்ளது. இறுதியில் ஆதாயமும் வராமல், முதலீடு செய்த அசலும் கிடைக்காமல் போன பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் தற்போது காவற்படையில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இயங்கலை முதலீடுகளில் பொதுமக்கள் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு பினாங்கு மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்!








