கோலாலம்பூர், ஜூலை.16-
குடும்பப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள பெண்கள், சரியான வழிமுறைகளின் கீழ் உதவியை நாடுமாறு மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி அறிவுறுத்தியுள்ளார்.
குடும்பப் பிரச்னையால் மன உளைச்சல் மற்றும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இல்லத்தரசிகள் மனம் போன போக்கில் முடிவு எடுக்காமல் சரியான வழிமுறைகளின் கீழ் தேவையான உதவிகளை நாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பெண்களுக்கு உதவுவதற்காக பிரத்தியேகமாக Talian Kasih 15999 என்ற சிறப்பு தொலைபேசி தொடர்பு எண்ணை அமைச்சு கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உதவித் தேவைப்படக்கூடியவர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், உரிய நிவாரணத்தை பெற முடியும் என்று நான்சி ஷுக்ரி ஆலோசனை கூறினார்.
நேற்று கோலாலம்பூரில் 2025 ஆம் ஆண்டுக்கான தனித்து வாழும் தாய்மார்களுக்கான சிறப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் நான்சி ஷுக்ரி இதனைத் தெரிவித்தார்.








