கோலாலம்பூர், ஜனவரி.04-
2026 மலேசியாவிற்கு வருகை தாருங்கள் ஆண்டின் பிரச்சாரத்தின் முன்னோட்டமாக கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் நேற்றிரவு தொடங்கப்பட்ட Innovative Lighting Infrastructure Towards Eco-elegance Urbanisation எனும் 'I LITE U' ஒளியமைப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில், மலேசியர்கள் அனைவரும் தங்கள் பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமையைப் பாதுகாத்து, பேணிக் காக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் சுற்றுலாத் துறையின் வெற்றியானது, நாட்டில் உள்ள அனைத்து இன மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தாலேயே சாத்தியமானது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.
"நாம் ஒரு சிறந்த தேசம், இதில் பெருமை கொள்ள வேண்டும். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா மற்றும் சரவாக் மக்கள் என அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கிய மலேசியர்கள் நாம்" என்று பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.
பெர்லிஸ் முதல் சபா, சரவாக் வரையிலான நமது வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மையை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
அமைதியான, பல இன சமூகம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவை நாட்டின் செழிப்பான சுற்றுலாத் துறைக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளன என்று நேற்றிரவு 'I LITE U' ஒளியமைப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையிலான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட 'I LITE U' திட்டமானது, கோலாலம்பூரின் இரவு நேர நகர்ப்புற காட்சியை மேம்படுத்துவதையும், நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
கோலாலம்பூரின் இரவு நேர அழகிற்குப் புதிய பரிமாணத்தை வழங்கும் 'I LITE U' ஒளியமைப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில், உலக நட்சத்திரத்தின் வருகையால் கூடுதல் பொலிவு பெற்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில், மலேசியாவிற்குப் பெருமை சேர்த்த ஆஸ்கார் விருது வென்ற நடிகை டான் ஶ்ரீ மிஷேல் யியோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவிற்கு மெருகூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.








