கோலாலம்பூர், டிசம்பர்.22-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற இன்று அளித்துள்ள தீர்ப்பு, அரசியலமைப்புக்கு உட்பட்டதாகும் என்று அரசியலமைப்பு சட்ட நிபுணர் பேராசிரியர் டாக்டர் கைரில் அஸ்மின் மொக்தார் கருத்து தெரிவித்துள்ளார்.
நஜீப்பின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் முடிவு, கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டது மற்றும் சட்டப்பூர்வமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரிவு 42-ன் கீழ், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் என்பது மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் பேரில் மாமன்னரால் செயல்படுத்தப்படுவதாகும். இந்த விவகாரத்தில், சர்ச்சைக்குரிய 'கூடுதல் அரசாணை' மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக் காடினார்.
மலேசியாவின் தற்போதைய சட்டக் கட்டமைப்பில், சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஒருவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கான நேரடி விதிகள் அல்லது வழிமுறைகள் இல்லை என்பதை நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் விளக்கினார்.
ஒரு கைதியை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிப்பது என்பது சிறைத்துறை இயக்குநரின் முழுமையான விருப்புரிமைக்கு உட்பட்டது என்றும், அதனை நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்பதையும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.
இந்தத் தீர்ப்பின் மூலம், அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத எந்தவோர் உத்தரவும் செல்லுபடியாகாது என்பது தெளிவாகியுள்ளது என்று பேராசிரியர் டாக்டர் கைரில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








