Oct 1, 2026
Thisaigal NewsYouTube

லங்காவியில் போலி அகதிகள் அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகம் - 43 வெளிநாட்டவர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லங்காவியில் போலி அகதிகள் அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகம் - 43 வெளிநாட்டவர்கள் கைது

லங்காவியில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட இரண்டு நாள் அதிரடி சோதனையில், போலியாகத் தயாரிக்கப்பட்ட அகதிகளுக்கான UNHCR அட்டைகள் மற்றும் தற்காலிக வேலை அனுமதி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 43 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் 17 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில் மொத்தம் 95 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 38 ஆண்களும் 5 பெண்களும் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 17 வங்காளதேசத்தினர், 11 மியான்மர் நாட்டவர்கள், 11 இந்தோனேசியர்கள், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஓர் எகிப்தியர் அடங்குகின்றனர்.

மேலும், இரண்டு IMM.29 சாட்சி அழைப்பாணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக பெலாந்தே குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, போலியானவை என சந்தேகிக்கப்படும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடிநுழைவுச் சட்டத்தை மீறும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது தங்குமிடம் வழங்கும் தரப்பினருக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கெடா மாநில குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.

 

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →