உலகமே எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வேளையில், எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியிலேயே குறியாக இருப்பதாக ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் பயனற்ற எதிர்க்கட்சியாக பெரிக்காத்தான் நேஷனல் திகழ்வதாகக் குறிப்பிட்ட வூ கா லியோங் , மக்கள் நலனுக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் முன்வைக்காமல், ஆட்சியைப் பிடிப்பதிலேயே அவர்கள் பிடிவாதமாக இருப்பதாகக் கூறினார்.
முன்னதாக பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது மக்கள் 'வெள்ளைக் கொடி' ஏந்தி உதவி கேட்ட அவல நிலையை நாட்டு மக்கள் மீண்டும் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெர்சத்து (BERSATU) கட்சி தற்போது பிரிந்து கிடப்பதையும், பெரிக்காத்தான் நேஷனல் என்பது இப்போது 'பாஸ் நேஷனல்' ஆக மாறிவிட்டதையும் அவர் எள்ளி நகையாடினார்.
தங்களுக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களைத் தீர்க்க முடியாதவர்கள், மாநில நிர்வாகத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் தெரிவித்தார்.
எதிர்வரும் பேராக் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, எதிர்க்கட்சியினர் தங்களுக்குள் இருக்கும் குழப்பங்களைச் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








