Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கண்காணிப்புக்குழு ஒன்றை மித்ரா அமைக்கும் டத்தோ ரமணன்
தற்போதைய செய்திகள்

கண்காணிப்புக்குழு ஒன்றை மித்ரா அமைக்கும் டத்தோ ரமணன்

Share:

மலேசிய இந்திய சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் மூலமாக நிறுவனங்களுக்கும், அரசு சாரா இயக்கங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி நிதி, வெளிப்படைத்தன்மையுடன் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று அதன் சிறப்புப்பணிக்குழுத் தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிதி, உரிய இலக்கை சென்றடையும் அதேவேளையில் இந்திய சமூகத்தில் பி40 தரப்பைச் சேர்ந்தவர்கள் பயன் அடைவதை எல்லா நிலைகளிலும் உறுதிசெய்யப்படும் டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

குறிப்பாக மித்ராவின் மானியத்தை பெற்ற அமைப்புகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதற்கு இந்த கண்காணிப்புக்குழு திடீர் சோதனையை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் கல்வி, உயர்க்கல்வி, பொருளாதாரம், திறன் பயிற்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு 2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மானிய ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.

மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மொத்தம் 3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டது. நிதியை பெறுவதற்கு 2,373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 353 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 183 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீட்டிற்குரிய ஒப்புதல் கடிதம் இன்று வழங்கப்பட்டதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.

Related News