ஷா ஆலாம், ஆகஸ்ட்.15-
அரச மலேசிய போலீஸ் படையில் குற்றப்புலனாய்வுத் துறைக்கான சிஐடி இயக்குநாக டத்தோ குமார் முத்துவேல் நியமனத்தை இன ரீதியான கண்ணோட்டத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் பெர்சத்து கட்சியின் போர்ட்டிக்சன் தொகுதித் தலைவர் செக்குபார்ட் எனப்படும் பட்ருல் ஹிஷாம் ஷாரின்னைக் கண்டிக்காமல் மெளனம் காத்து வரும் பெரிக்காத்தான் நேஷனலில் இந்தியர்களைத் தளமாகக் கொண்ட உறுப்புக் கட்சியான எம்ஐபிபி மற்றும் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் உரிமைக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு என்ற போதிலும் போலீஸ் படையில் முக்கியப் பதவியை ஏற்றிருக்கும் டத்தோ குமார் நியமனத்தை இனத்துவேஷத் தன்மையில் நோக்கியிருக்கும் செக்குபார்ட் கருத்துக்கு எம்ஐபிபி கட்சியும், உரிமைக் கட்சியும் பதிலடி கொடுக்காமல் மவுனம் காத்து வருவது, இரு இந்தியர் கட்சிகளின் தலைவர்கள் அந்தக் கூட்டணியின் சகாக்கள் அல்ல. மாறாக, அவர்கள் அந்தக் கூட்டணிக்கு வெறும் அரசியல் அலங்காரத் தளவாடங்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்று பிரகாஷ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சொந்த சமூகத்திற்கு நேரடியாகக் குறி வைக்கப்பட்டு இனவெறியுடன் குரல்கள் கொடுக்கப்படும் போது அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் மெளனம் காத்து வருவது, துரோகத்திற்குத் துணைப் போவதற்குச் சமமாகும். இவர்கள் வாய் சவடால் பேச்சில் மட்டுமே வல்லவர்கள், செயலில் கோழைகள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பெரிக்காத்தான் நேஷனலில் இவர்கள் இந்திய சமூகத்தின் உரிமைக்காகப் போராடவில்லை மாறாக வாடகைக்கு இருக்கிறார்கள். அதனால்தான் எதுவும் பேசமுடியாமல் உள்ளனர். எம்இபிபி கட்சியும், உரிமைக் கட்சியும் சமூகத்தின் பாதுகாவலர்கள் அல்ல. மாறாக அந்தக் கூட்டணியில் பயனற்ற வெறும் அலங்காரத் தளவாடங்களே என்று பிரகாஷ் சாடினார்.
மலேசியாவின் எதிர்காலம், பிளவுபடுத்தும் சொல்லாடல் எங்கிருந்து வந்தாலும், அதற்கு எதிராகத் துணிந்து குரல் கொடுக்கும் தலைவர்களே நமக்குத் தேவை. அதுதான் ஒரு சமூகத்தின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் பாதுகாக்கும்.
அதை விடுத்து தாங்கள் கொண்ட கொள்கையில் துணிவை விட மௌனத்தின் ஆறுதலைத் தேர்வு செய்தால், நாம் ஒரு வலுவான, ஒன்றுபட்ட ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்று பிரகாஷ் தமது அறிக்கையில் தெரிவித்தார்.








