பிறை, ஆகஸ்ட்.09-
மனித வள அமைச்சின் இந்தியர்களின் திறன் மேம்பாடு முன்முயற்சியான மிஸி (MISI) ஏற்பாட்டில் பினாங்கு பிறையில் "கியூசி ஓபரேஷன்", எனும் தர செயல்பாடு பராமரிப்பு மீதான பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 4 முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெற்ற இந்த கியூசி செயல்பாடு பராமரிப்பு பயிற்சியில் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு தரக் கட்டுப்பாட்டுத்துறையில் உள்ள விலைமதிப்பற்ற பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டனர்.
அத்துடன் நடைமுறை சார்ந்த அறிவார்ந்த விபரங்களையும் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மிஸியின் இந்த பயிற்சித் திட்டத்தில் கிட்டியது.

இந்த நான்கு நாள் பயிற்சியானது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் ஆய்வியல், வாடிக்கையாளர் கருத்து வரை உற்பத்தித் துறையின் அனைத்து நிலைகளிலும் தரத்தை உறுதிச் செய்து, நடைமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த பயிற்சித் திட்டத்தை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு அதிகாரப்பூர்வமாக நிறைவுச் செய்து வைத்தார்.

டத்தோ ஶ்ரீ சுந்தராஜுவுடன், மனித வள அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ், பிறை நகராண்மைக்கழக உறுப்பினர் பொன்னுதுரை விக்டர் மற்றும் புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்றத் தொகுதியின் அதிகாரி யுகன்ராஜ் தேவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பயிற்சிக்கான பாடநெறியை வெற்றிகரமாக முடித்த ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தரமான பயிற்சி மூலம் சந்தைப்படுத்தலை அதிகரிக்கும் திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கும் இந்த பயிற்சி அடித்தளமிட்டது.
டத்தோ ஶ்ரீ சுந்தராஜுவும், டிக்காம் லூர்ட்ஸும் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்புக்குத் தங்கள் பாராட்டுகளையும் ஊக்கத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தையும், தொழில்துறைத் தரங்களை மேம்படுத்துவதில் தரக் கட்டுப்பாட்டின் முக்கிய பங்கையும், நாட்டின் பணியாளர்களின் போட்டித்தன்மையையும் அவர்கள் வலியுறுத்தினர்.








