ஷா ஆலாம், ஆகஸ்ட்.12-
ருக்குன் நெகாரா கோட்பாட்டை மீறிய நிலையில், நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சட்ட இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலேவிற்கு Datuk Dy எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜசெக ஆலோசகர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டத்துறை அலுவலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமின்றி அதற்குச் சவால் விடும் அக்மால் மீது நிந்தனைச் சட்டம் பாய வேண்டும் என்று லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
பினாங்கு கப்பாளா பாத்தாஸில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக வயதான கடைக்கார உரிமையாளர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அறியாமல் நடந்த செயலுக்காக அந்த கடைக்காரர், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் சட்டத்துறை அலுவலகம், வரும் வியாழக்கிழமைக்குள் அந்த முதியவரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டவில்லை என்றால் அந்த முதியவரின் கடையின் முன் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்மால் மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட முதியவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து விட்ட நிலையில், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்கும் தன்மையில் சினமூட்டும், உணர்ச்சிகரமான விவகாரத்தை அக்மால் தூண்டி வருவது பெரும் அச்சுறுத்தலாகும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.








