May 26, 2026
Thisaigal NewsYouTube
"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

Share:

கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தைப்பிங் சிறையில், 100-க்கும் மேற்பட்ட கைதிகள், தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த சிறையின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையானது மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில், அவமானகரமானதாக இருப்பதாகவும் லிம் லிப் எங் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கைதிகளுக்கு எதிராக சிறை அதிகாரிகள் போலீசில் அளித்த புகார்களில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறை அதிகாரிகள், கைதிகளிடம், ஆயுதங்களை பயன்படுத்தி அளவுக்கு மீறிய வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதை “சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரமான தாக்குதல்” என்றும் லிம் லிப் எங் விவரித்துள்ளார்.

கடந்த 2025 -ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், தைப்பிங் சிறையில், ஹால் பி பகுதியில் இருந்து, பிளாக் இ பகுதிக்கு, கைதிகளை இடமாற்றும் நடவடிக்கையின்போது, சுமார் 60 சிறைக் காவலர்களால் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், கான் சின் எங் என்ற கைதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சுஹாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தைப்பிங் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் தவறான செயல்கள் நடந்ததற்கான தெளிவான மற்றும் நேரடி ஆதாரங்கள் இருப்பதாகவும் சுஹாகம் தெரிவித்துள்ளது.

Related News