தவாவ், நவம்பர்.10-
சபா மாநிலத்தின் மொத்த வருவாயில் 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கு மத்திய அரசாங்கம் திருப்பித் தர வேண்டும் என்று கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பில் இவ்விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்கு நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத்துறை தலைவரின் ஆலோசனை கேட்டறியப்படும் என்ற பிரதமர் குறிப்பிட்டார்.
கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான தீர்ப்பு மூன்று தினங்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது. எனவே சட்ட நடைமுறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இன்று தாவாவ், தாமான் செமாராக்கில் இலக்கவியல் சுற்றுலாத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் தம்முடைய நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே கோடி காட்டி விட்டதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
1963 ஆம் ஆண்டு சபா ஒப்பந்தத்தின் கீழ் சபா மாநில வருவாயில் 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கே மத்திய அரசாங்கம் திருப்பித் தரப்பட வேண்டும் என்றும், ஆனால், கடந்த 50 ஆண்டு காலமாக அந்த 40 விழுக்காட்டுத் தொகையை மத்திய அரசாங்கம் வழங்காமல் இருப்பது கூட்டரசு அரசிலமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதச் செயலாகும் என்று கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை வழங்கியிருந்தது.








