சைபர்ஜெயா, டிசம்பர்.05-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை ஒன்றை நடத்துமாறு அரச மலேசியப் போலீஸ் படைக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மலாக்காவில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும், நாட்டில் உள்ள தடுப்புக் காவலில் நிகழ்ந்துள்ள மரணங்களுக்கும், எந்தவொரு தரப்பினரையும் தற்காக்காமல், எதனையும் மூடி மறைக்காமல் வெளிப்படையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அதே வேளையில் கிரிமினல்கள் மற்றும் நாட்டின் சட்டத்தை மீறும் எந்தவொரு செயலுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை எடுக்கக்கூடிய உறுதியான நடவடிக்கையை அமைச்சரவை வரவேற்றுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இருப்பினும் மலாக்கா மற்றும் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய புகார்களில் விதிமுறை மீறல்கள் இருக்குமானால் அது குறித்து அரச மலேசியப் போலீஸ் படை வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இது போன்ற விவகாரங்களில் எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கவோ அல்லது தற்காக்கவோ வேண்டாம் என போலீஸ் படைத் தலைவரிடம் தாம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கிரிமினல்களை நாம் பாதுகாக்க முடியாது. அதே வேளையில் போலீஸ்காரர்கள் உட்பட எந்தவொரு தரப்பினரும் விதிமுறைகளை மீறி நடப்பார்களேயானால் அவர்களையும் அரசாங்கம் பாதுகாக்காது என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








